தலைநகர் புது டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் பலத்த மழை பெய்தது. முக்கியச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புது டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை 15.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழையினால் நிஜாமுதீன் சந்திப்பு, காசிப்பூர், ஆஷாத்பூர், லஜ்பட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியசாகக் குறைந்துள்ளது. இது வழக்கத்தை விட 2 டிகிரி குறைவாகும்.
டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.