நாடாளுமன்றத்தைச் சந்திப்பதற்குப் பிரதமர் பயப்படவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி, புரட்சிகர சோஷலிசக் கட்சி ஆகிய 4 இடதுசாரி கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தைச் சந்திப்பதற்குப் பயப்படுகிறது" என்று கூறியுள்ளன.
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அணு தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) ஒப்புதலைப் பெறும் நடவடிக்கைகள் முடியும் வரை நாடாளுமன்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு விரும்புகிறது.
தற்போதைய நிலைமையின்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 11 ஆம் தேதி கூட நாடாளுமன்றம் கூட்டப்படுவது சந்தேகமே. தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துள்ள மத்திய அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியோ வெற்றிபெற்று விட்டது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஏற்கெனவே ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 5 வரை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு நடந்த இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு, தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றத்தை மக்களவைத் தலைவர் தள்ளிவைத்தார்.