புனித அமர்நாத் குகைக் கோயிலுக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில், பிரிவினைவாதிகளை எதிர்த்து திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
நாடு தழுவிய போராட்டம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை பா.ஜ.க நிராகரித்துள்ளது.
புனித அமர்நாத் குகைக் கோயில் விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி- உடன் நடத்தப்பட்டு வரும் பேச்சைத் தொடர்வதற்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களது போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதில் பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த பா.ஜ.க. உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே அறிவித்தபடி மூன்று நாள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் போராட்ட விடயத்தில் பா.ஜ.க.விற்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக அவ்வட்டாரங்கள் கூறின.
ஜம்முவில் போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி அமைப்பில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.