உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் மேலும் 3 உருவச் சிலைகளை திறக்க அம்மாநில முதல்வர் மாயாவதி திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சி அலுவலகத்தில் நிறுவனர் கன்ஷிராம் சிலைக்கு அருகிலேயே தனது உருவச் சிலையை வைத்தார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் திறக்கப்பட்டாலும், இது அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமின்றி, அனைத்து தரப்பிலும் இருந்து அவருக்கு எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியின் மாநில தலைமையகமான பகுஜன் நாயக் பூங்கா, கன்ஷிராம் நினைவகம் மற்றும் அம்பேத்கர் நினைவுப் பூங்கா ஆகியவற்றில் தலா ஒரு சிலை என புதிதாக 3 மாயாவதி சிலைகள் நிறுவப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.