அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசே திரும்பப் பெற்றுக்கொண்ட விவகாரத்தைப் பிரிவினைப் பிரச்சனையாகக் கருதக் கூடாது என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமர்நாத் நிலப் பிரச்சனையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆக்கபூர்வமாக அணுகினால் விரைவில் தீர்வுகாண முடியும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமர்நாத் நில விவகாரம் பிரிவினை தொடர்பான பிரச்சனை அல்ல; இருந்தாலும் அது முக்கியமான விவகாரம் என்றே நான் கருதுகிறேன். இது தேசிய நலன் தொடர்பான பிரச்சனை என்பதால், அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமான முறையில் இதை அணுக வேண்டும் என்றார்.
பின்னர் பிரதமர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்பு நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பிரணாப் முகர்ஜி விரிவாக விளக்கினார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைவரும் முதலில் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வுகாண முடியும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து நடந்த பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. கலவரம் நடைபெறும் பகுதிகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுவினர் சென்று நிலைமையை ஆராய்ந்த பிறகு தீர்வு பற்றி ஆலோசிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.