அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரத்தால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிக்க, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வ் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி சயீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஜம்முவில் பதற்றம்: ஒருவர் பலி!
முன்னதாக ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் மீறிப் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றன. பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் பல்வேறு அமைப்புகள் விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக பதற்றம் நிலவியது.
ஜம்மு- பதன்கோட் நெடுஞ்சாலையில் கத்துவா நகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் படையினருடன் ஒரு கும்பல் மோதலில் ஈடுபட்டது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் அந்தக் கும்பல் கலைய மறுத்ததால், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகப் படையினர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாதுகாப்புத் தரப்புப் பேச்சாளர் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்தார்..