ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நெளகாம் பிரிவில் உள்ள இந்தியப் படையினரின் நிலைகளின் மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து 22 ஆம் முறையாக அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து, ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்தின் பேச்சாளர் ஏ.கே.மாத்தூர் கூறுகையில், "இந்தத் தாக்குதல் சிறிது நேரமே நீடித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை நமது படையினர் உறுதி செய்துள்ளனர்" என்றார்.
நெளகாம் பகுதியில் இன்று மதியம் 12.15 மணிக்கு பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்பட்டுள்ள 22 ஆவது அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கையாகும்.
"குண்டுகள் வந்த திசையைப் பார்த்தபோது, அது நிச்சயமாகப் பாகிஸ்தான் பகுதியில் இருந்துதான் வந்துள்ளது என்று நமது படையினர் உறுதி செய்துள்ளனர். மலைப்பகுதி என்பதால் அந்தக் குண்டுகளை பாகிஸ்தான் படையினர்தான் ஏவினார்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை" என்றார் மாத்தூர்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லைகளுக்குள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் மீது பெரும் அழுத்தம் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஷா கிலானியைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அத்துமீறல்கள் இரு தரப்பு அமைதிப் பேச்சுக்களை சிக்கலாக்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.