ஆந்திராவில் மழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள், நிவாரணப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கம்மம், வாரங்கல், அடிலாபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் இன்றும் மூன்றாவது நாளாக நிரம்பி வழிகின்றன.
அடிலாபாத், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் 4 பேரும், கம்மம் மாவட்டத்தில் 3 பேரும், வாரங்கல் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தலா ஒருவரும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.