இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீக்கி சிறப்பு நடுவர் மன்றம் அளித்துள்ள உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிமி இயக்கத்தின் மீதான தடையை நீக்கி சிறப்பு நடுவர் மன்றம் அளித்துள்ள உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிமி இயக்கத்திற்குத் தாக்கீது அனுப்பவும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.
முன்னதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சிமி இயக்கத்தின் மீது, பிப்ரவரி 7 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தடை நீட்டிப்பு ஆணையை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் நேற்று ரத்து செய்தது.
சிமி இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிப்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை சிறப்பு நடுவர் மன்றம் கூறியது.