மேற்குவங்க மாநிலத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட 12 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்னுமிடத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் தரகேஷ்வர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு பக்தர்கள் சிலர் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த பேருந்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனால் பேருந்து ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா என்ற இடத்தில் துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிலர் பேருந்தில் இருந்து இறங்கி அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியதோடு நின்று கொண்டிருந்த பேருந்து மீதும் மோதியது.
இதில் 8 வயது சிறுவன் உள்பட 11 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் படுகாயமடைந்த 13 பேரை மீட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கி பலியான இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.