அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், விலைவாசி உயர்வு, ஜம்மு- காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:
நமது நாடு தற்போது பல முக்கியப் பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது. அமர்நாத் விவகாரம் காரணமாக ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு, சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற கடினமான சூழ்நிலையை நமது நாடு எதிர்நோக்கியுள்ளது பற்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத் தொடரின் முடிவில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
எனவே நாடாளுமன்றத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கூட்ட வேண்டும். இவ்வாறு அத்வானி வலியுறுத்திப் பேசினார்.