அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவியலாத புதுவை முதல்வர் ரங்கசாமி பதவிவிலக வேண்டும் என்று அம்மாநில அ.இ.அ.தி.மு.க. செயலர் எ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதால்தான் முதல்வர் ரங்கசாமியால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை என்று அன்பழகன் குற்றம்சாற்றினார்.
முன்பே திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டம், அமைச்சர்கள் சிலரின் புறக்கணிப்பு முடிவினால்தான் நாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், நாளைய கூட்டத்தில்கூட எல்லா அமைச்சர்களும் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான் என்றும் அன்பழகன் கூறினார்.
பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அவற்றைச் செயல்படுத்தத் திட்டமிட்டதில், முதல்வருக்கும் அமைச்சர்களுக்கம் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தான் கருதுவதாக அவர் கூறினார்.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு அரசு ஒதுக்கீடைப் பெறத் தவறிய புதுவை அரசைக் கண்டித்துத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.