அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடில் 2 பேர் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
"சம்பாவில் நேற்றுக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடில் 2 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்" என்று சம்பா மாவட்ட நீதிபதி செளரவ் பகத் கூறியதாக பி.டி.ஐ. தெரிவிக்கிறது.
முதுநிலைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) பிரதாப் சிங் தலைமையிலான காவலர்களை, உரிய உத்தரவுகள் இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தத் தூண்டிய விடயம் எது என்று இந்த விசாரணையின்போது கண்டறியப்படும் என்று நீதிபதி பகத் கூறியுள்ளார்.
சம்பா நகரத்தில் நேற்றுப் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது. கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று எஸ்.எஸ்.பி. பிரதாப் சிங், அருகில் இருந்த காவலரின் ஏ.கே. துப்பாக்கியை எடுத்துச் சரமாரியாகச் சுட்டார் என்று ஸ்ரீ அமர்நாத் சங்ராஸ் சமிதி அமைப்பினர் குற்றம்சாற்றியுள்ளனர்.
ஐ.ஜி. சக்சேனா தலைமையிலான மத்திய ரிசர்வ் காவலர்கள் வானத்தை நோக்கிச் சில சுற்றுக்கள் சுட்டனர். ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. எஸ்.எஸ்.பி. பிரதாப் சிங் தலைமையிலான காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடில்தான் 2 பேர் பலியாகியுள்ளனர் என்று ஸ்ரீ அமர்நாத் சங்ராஸ் சமிதி அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும், எஸ்.எஸ்.பி. பிரதாப் சிங்கை உடனடியாகப் பணி நீக்கம் செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.