இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழு இந்தியாவிற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் முழு விலக்கு (unconditional full waiver) அளிக்க வேண்டும் என்று இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
இந்தியா அளித்த கண்காணிப்பு ஒப்பந்த வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அணு சக்தி தொழில் நுட்ப வணிக்க் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.
இந்த நிலையில், தி இந்து நாளிதழுக்கு அது குறித்து சிறப்பு நேர்காணல் அளித்துள்ள அனில் ககோட்கர், பன்னாட்டு அணு சக்தி முகமை ஒருமனதாக நமது கண்காணிப்பு வரைவிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அணு சக்தி தொழில் நுட்ப வணிகக் குழு (Nuclear Supplier’s Group- NSG) இந்தியாவிற்கு விலக்கு அளிப்பதில் நிபந்தனை ஏதும் விதிக்குமானால் அது, “ஒரு கை வழங்கியதை மறு கை பிடுங்கிக் கொள்வதற்கு ஒப்பாகும்” என்று ககோட்கர் கூறியுள்ளார்.
நிபந்தனையற்ற விலக்கு (unconditional waiver) பெறுவதில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அணுகுமுறை தொடர்பான புரிதலில் வேறுபாடு உள்ளது என்று கூறினார்.
“அணு ஆயுதம் பெற்றிராத (Non-nuclear Weapons State - NNWS) நாடுகளுக்குப் பொருந்தும் நிபந்தனைகள் எதுவும் இந்தியாவிற்குப் பொருந்தாது. எனவே, அணு ஆயுதம் பெற்றிராத நாடுகளுக்கு உரிய நிபந்தனைகள் எதுவும் இந்தியாவிற்கு பொருந்தாது என்று கூறி விலக்கை அளிக்க வேண்டியது அவசியமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு எரிபொருள் செரிவூட்டல் மற்றும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் ஆகியன தொடர்பாக சில நிபந்தனைகள் உள்ளன. இவை எதுவும் இந்தியாவிற்கு தொடர்பு படுத்தக்கூடாது என்பதே நமது நிலை என்று ககோட்கர் கூறினார்.
“அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்பது நாமே நமக்கு விதித்துக்கொண்ட தடை. எனவே சோதனையையும் ஒத்துழைப்பையும் ஒன்றோடொன்று இணைத்து நிபந்தனை விதிப்பதை ஏற்கமுடியாது. அதேபோல், அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் இந்தியா இணைந்திட வேண்டும் என்றோ அல்லது அணு ஆயுதமற்ற நாடுகளுக்குறிய நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டுமென்றோ எந்த ஆலோசனையையும் வழங்கக்கூடாது. நம்மை எந்த விதத்திலும் அணு ஆயுதமற்ற நாடு என்று என்.எஸ்.ஜி. முத்திரையிடக் கூடாது” என்று அனில் க்கோட்கர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியா அணு சக்தி தொடர்பான வணிக ஒப்பந்தங்களை ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், ஏன் அமெரிக்காவுடன் கூட, ஏற்கனவே செய்து கொண்டுள்ளது. பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதனைத் தொடர்வதற்கு எந்தத் தடையுமில்லை.
எனவே, என்.எஸ.ஜி.யில் உள்ள விதிமுறைகள் நமக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவை. நாளை (பாதுகாப்புத் தொடர்பான) அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக நாம் அணு ஆயுத சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் இந்த நிபந்தைகள் நமக்கு பல தடைகளை உருவாக்க்க்கூடியவை. அதனால்தான் நிபந்தனையற்ற விலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்கிறோம்” என்று க்கோட்கர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய ஒப்புதலைப் பெற உறுதியளித்துள்ள அமெரிக்க அது தொடர்பாக உருவாக்கிய வரைவில், “இந்தியாவின் அணு சக்தி மையங்களின் மீதான முழுப் பாதுகாப்பு கண்காணிப்பை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர என்.எஸ்.ஜி. முயற்சிக்கும்” என்ற வாசகம் சேர்க்கப்பட்டிருந்தது.
அதனை ‘நாம் தூக்கி எறிந்துவிட்டோம்’ என்று கூறியுள்ள அனில் ககோட்கர், “இதுவெல்லாம் மாற்ற முடியாதது, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்று கூறப்படக்கூடிய எதையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று உறுதிபடக் கூறியுள்ளார்.