நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பாத வரை, சி.என்.என்.- ஐ.பி.என். டிவியைப் புறக்கணிப்பதாக பா.ஜ.க. கூறியுள்ளதற்கு ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் 22 ஆம் தேதி மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சம் தருவதாகப் பேசப்பட்டு முன்பணமாக ரூ.1 கோடி தரப்பட்டதாகக் கூறிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 3 பேர், மக்களவையில் பணத்தைக் காட்டினர்.
பா.ஜ.க. எம்.பி. க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை ரகசியமாகப் பதிவு செய்துள்ள சி.என்.என்.- ஐ.பி.என்.' டிவி, அந்த ஒளிப்படத்தை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. ஒளிப்படம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பதாலும், இந்த விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியின் பரிசீலனையில் உள்ளதாலும், அதை ஒளிபரப்பப் போவதில்லை என்று சி.என்.என்.- ஐ.பி.என். அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள பா.ஜ.க., அந்த டிவியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. "அரசின் கடுமையான நிர்ப்பந்தத்திற்கு சி.என்.என்.- ஐ.பி.என். ஆளாகியுள்ளது. குறிப்பிட்ட ஒளிப்படத்தை ஒளிபரப்பாத வரையில், இந்த டிவியின் விவாத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்" என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
பா.ஜ.க.விற்குக் கண்டனம்!
இந்நிலையில், பா.ஜ.க.விற்கு செய்தி ஒளிபரப்பாளர் சங்கம், இந்திய ஊடக ஆசிரியர்கள் கில்டு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் கில்டு தலைவர் அலோக் மேத்தா, பொதுச் செயலர் சச்சிதானந்த மூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க.வின் நெருக்கடி தரும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு செய்தியை ஒளிபரப்பும் உரிமை குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியருக்கு உள்ளது. அதில் எந்த கட்சியும் தலையிட முடியாது.
"விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த ஒளிப்படத்தை வெளியிட்டால், அது விசாரணையின் போக்கை பாதிக்கும் என்பதால்தான் ஒளிபரப்பவில்லை" என்று ராஜ்தீப் சர்தேசாய் விளக்கியுதை பா.ஜ.க. மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு செய்தியை ஒளிபரப்புவது அல்லது பிரசுரிப்பதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது மரபாகும். அதைத்தான் ராஜ்தீப் சர்தேசாய் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான ஒளிப்படங்களை சி.என்.என்.-ஐ.பி.என். தானாகவே முன்வந்து மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. அதுதான் முறையான செயல். எனவே பா.ஜ.க.வின் புறக்கணிப்பு முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது என்று கூறியுள்ளனர்
செய்தி ஒளிபரப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "பா.ஜ.க. அறிவிப்பானது பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய வகை மிரட்டலாகும். ஊடக உலகம், ஒளிபரப்பாளர்களுக்கு விரோதமாகப் பா.ஜ.க. எடுத்துள்ள இந்த முடிவு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
செய்திகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியர்களுக்கு உள்ள உரிமையில் எந்த வகையான தலையீட்டையும் அனுமதிக்க முடியாது. இதை அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க வேண்டும்.
அப்படி ஒரு தலையீடு ஊடகத்தின் மீது திணிக்கப்பட்டால் அது தனது சுதந்திரத்தை இழந்து விடும். அந்த வகையில் பா.ஜ.க.வின் புறக்கணிப்பு முடிவு பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
பா.ஜ.க. தனது நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் ஊடக உலகுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை தவிர்க்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.