பன்னாட்டுத் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால், அயல்நாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் மத்தியப் புலனாய்வுக் கழகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் புதிய இயக்குநர் அஸ்வனி குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று புதிதாகப் பதவியேற்ற ம.பு.க. இயக்குநர் அஸ்வனி குமார், "ம.பு.க.வின செயல்பாடுகள் நமது நாட்டின் எல்லைக்குள் நின்று விடக்கூடாது. விசாரணை, கூட்டு நடவடிக்கை, கூட்டுப் புலனாய்வு உள்ளிட்டவற்றில் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
பண மோசடி உள்ளிட்ட சில வகைக் குற்றங்களில் நமது நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகள் பிற நாடுகளாலும் தேடப்படுகின்றனர். மோசடி செய்து பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நம் நாட்டுப் பணம், சொத்துக்களை மீட்க வேண்டும் என்பது ம.பு.க.வின் நோக்கம். எனவே இதுபோன்ற வழக்குகளில் பிற நாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது என்றார் குமார்.
பல்வேறு குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் மாநிலக் காவல் துறையினருக்கும் ம.பு.க.விற்கும் இடையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குமார் வலியுறுத்தினார்.