தன்னைப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியால் எந்த உத்தரவும் தர முடியாது என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார்.
தனது பதவிக்காலம் முடியும் வரை மக்களவைத் தலைவர் பதவியில் தான் நீடிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதையடுத்து, மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து சோம்நாத் சட்டர்ஜி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
கட்சியின் முடிவை ஏற்க மறுத்ததால் சோம்நாத் சாட்டர்ஜியைக் கட்சியில் இருந்து நீக்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சோம்நாத் சட்டர்ஜி, "என்னைக் கட்சியை விட்டு நீக்கிய நாள், எனது வாழ்நாளில் மிகவும் வருத்தமளிக்கும் நாள்" என்றார்.
மக்களவைத் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு எனக்கு கட்சி உத்தரவிட முடியாது என்ற அவர், தனது பதவிக்காலம் முடியும் வரை பதவிக்குரிய விதிகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொறுப்புடன் பணியாற்றுவேன் என்றார்.
தனது சுயநலத்திற்காகவும், சில கட்சிகளின் விருப்பத்திற்காகவும் தான் பதிவியில் நீடிப்பதாக வெளியான தகவல்களை வன்மையாக மறுத்துள்ள சோம்நாத் சட்டர்ஜி, அத்தகைய தகவல்கள் தவறானவை என்றார்.