இந்திய காப்புரிமை அலுவலகம் மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறும் வசதியை துவங்கிய ஓராண்டுக்குள்ளாகவே 1000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி காப்புரிமை, டிரேட்மார்க் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் கமல்நாத் துவக்கி வைத்தார். அப்பொழுதே மின்னணு மூலம் காப்புரிமை பெற விண்ணப்பிக்கும் முறையும் துவக்கப்பட்டது.
இதன் முதல் விண்ணப்பம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பெறப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று 1000-ஆவது விண்ணப்பமும் பெறப்பட்டது. இது மொத்த விண்ணப்பங்களில் 3 சதவீதம் ஆகும்.
மேலும் இன்னும் 2 ஆண்டுகளில் மீதமுள்ள 97 விழுக்காடு விண்ணப்பங்களை மின்னணு முறையில் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் பணம் செலுத்தும் முறையின் மூலம் இதுவரை சுமார் ரூ.2.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.