தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கப் படையினர் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமை தொடர்பாக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், 1974இல் இந்தியாவும் சிறிலங்காவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களுக்கு தங்களின் வலைகளை கச்சத்தீவில் காயவைக்க உரிமை உள்ளது என்றதுடன், தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கப் படையினர் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் உறுதியுடனும், வெளிப்படையாகவும் பிரதமர் மன்மோகன் சிங் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது பற்றி ஆலோசிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஆலோசனை வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 1964 புயலில் அழிந்துபோன தனுஷ்கோடி சாலை மற்றும் இருப்புப் பாதையை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.