இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தமிழ் அகதிகளின் சுதந்திரத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இலங்கை அகதி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய- மாநில அரசுகளுக்குத் தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அகதிகளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றுத் தலைமை நீதிபதி ஏ.கே.ஜி.கங்கூலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மூன்று வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் தாக்கீது அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மேட்டுப்பாளையம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதி ஞானப்பிரகாசம், தனது மனுவில், இலங்கை அகதிகள் தங்களுக்குச் சொந்தமாக எந்தச் சொத்துக்களையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தங்களின் வாழ்க்கைப் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
"வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட எந்தவிதமான அசையும், அசையாச் சொத்துக்களையும் அகதிகள் வைத்திருக்கத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தற்சமயம் அகதிகள் வசம் உள்ள அசையாச் சொத்துக்களையும் வந்த விலைக்கு விற்குமாறு தமிழக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. நாங்கள் விலங்குகளை வளர்ப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
வேலை இல்லாக் காலங்களிலும், மழைக் காலம் உள்ளிட்ட நேரங்களிலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.
ஓட்டுநர் வேலைக்குச் செல்வதற்காக இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று வைத்துள்ளோம்.
அகதிகளின் வாழ்க்கைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை மத்திய அரசிற்கு உள்ளது. அகதிகளை எந்த விதத்திலும் பாகுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் வசிக்கும் அகதிகளின் வாழ்க்கைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது." என்று ஞானப்பிரகாசம் தனது மனுவில் கூறியுள்ளார்.