ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள 'குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு நடத்துவதாக இருந்த போராட்டத்தை கன்னட அமைப்புகள் விலக்கி கொண்டன.
ரஜினிகாந்த் நேற்று கன்னட தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஒகேனக்கல் பிரச்சனையின் போது தான் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், 'குசேலன்'படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவரது இந்த வேண்டுகோளையும், கர்நாடக சினிமா வர்த்த சபை தலைவரும், நடிகையுமான ஜெயமாலாவுக்கு வருத்தம் தெரிவித்து எழுதிய வேண்டுகோள் கடிதத்தையும் ஏற்றுக்கொண்டு, கர்நாடகாவில் 'குசேலன்' படம் வெளியாக உள்ள திரையரங்குகள் முன்பு இன்று நடத்துவதாக இருந்த போராட்டம் விலக்கிகொள்ளப்படுவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
ரஜினிகாந்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடக ரக்ஷனா வேதிகா அமைப்பின் தலைவர் நாராயணகவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " மன்னிப்பு கேட்டதன் மூலம் ரஜினிகாந்த் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி உள்ளார். எனவே 'குசேலன்' படத்துக்கு எதிரான போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது. படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் " என்று கூறியுள்ளார்.
இதனால் கர்நாடகாவில் ரஜினிகாந்தின் 'குசேலன்' படம் வெளியாவதில் இருந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ரஜினியின் 'குசேலன்' படம் 15 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தின் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய ரஜினிகாந்த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவர்களை உதைக்க வேண்டாமா' என்று பேசினார்.
இதற்கு கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவந்தனர்.
பின்னர் இதற்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த், தான் கர்நாடக மக்களை அவ்வாறு கூறவில்லை. ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களைத்தான் அப்படி கூறினேன் என்று விளக்கமளித்திருந்தார்.
ரஜினிகாந்த், கடந்த திங்கட்கிழமை கர்நாடக சினிமா வர்த்தக சபை தலைவரும் நடிகையுமான ஜெயமாலாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "என்னுடைய 'குசேலன்' திரைப்படம் கர்நாடகாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. கன்னடர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் விதமான செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை அதனால் 'குசேலன்' திரைப்படம் வெளியிட ஒத்துழைப்புத் தாருங்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கர்நாடகாவில் 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் 'குசேலன்' திரைப்படத்தை திரையிட கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு நேரில் வந்து பகிரங்கமாக மன்னிப்பு கோரினால்தான் 'குசேலன்' படத்தை திரையிட அனுமதிப்போம், மீறி வெளியிட்டால் கலவரம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விட்டிருந்தனர்.
இந்நிலையில் தனியார் கன்னட தொலைக்காட்சிஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ரஜினிகாந்த், "இந்த நிகழ்வு எனக்கு பாடத்தை கற்றுத்தந்துள்ளது. இது போன்ற தவறை நான் மீண்டும் செய்யமாட்டேன். கர்நாடகாவில் 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியுங்கள்.
என்னை எதிர்க்கும் மக்களும் கர்நாடகாவின் குழந்தைகள். அவர்கள், அவர்களுடைய மாநிலத்திற்காக இதனைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் நான் கூறியதை தயவு செய்து... தயவு செய்து... மறந்துவிடுங்கள். என்னுடைய படத்தை திரையிட எனக்கு அனுமதியுங்கள். நான் கன்னடர்களுக்கும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.