ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன், பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக்க இடதுசாரிகள் ஒருபோதும் திட்டமிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஊடகங்கள் தான் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக இடதுசாரிகள் முன்னிலைப்படுத்தியதாக செய்திகளை வெளியிட்டன என்று கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கூறி, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மக்களவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதாயிற்று.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அரசுக்கு எதிராக வாக்களித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாக மாயாவதி, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், அவர்களின் முயற்சி பலிக்காமல் போனது.
இதற்கிடையே ஒருவேளை அரசு கவிழும் பட்சத்தில் மாயாவதியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துவது என்று இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் புனேயில் கட்சியினர் மத்தியில் பேசிய பிருந்தா காரத், மாயாவதியை இடதுசாரிகள் முன்னிலைப்படுத்தியதாக ஊடகங்கள் தான் செய்திகளை வெளியிட்டன என்று குறைகூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான கட்சிகளின் ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரட்டியதாகவும், அதற்கான பிரசார குழு கூட்டத்தில் அவர் இடம்பெற்றதாகவும் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் கூறினார்.