Publish Date: Fri, 01 Aug 2008 (13:30 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (13:30 IST)
ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ பிடித்ததில் கருவுற்ற பெண் உட்பட 15 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
செகந்திராபாத்- காக்கிநாடா விரைவு ரயில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தல்லபூசலப்பள்ளி- மெகபூபாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள காட்டுப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, படுக்கை வசதி கொண்ட எஸ்-9 பெட்டியில் திடீரென்று தீ பிடித்தது என்றும், பின்னர் அது அருகில் இருந்த 4 பெட்டிகளுக்கும் பரவியது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவுற்ற பெண், 3 உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர் உட்பட 15 பேர் உடல் கருகி பலியாகினர் என்று தெற்கு மத்திய ரயில்வே பேச்சாளர் பி.கிருஷ்ணய்யா தெரிவித்தார்.
தீ பிடித்தவுடன் பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வெளியே குதித்தனர். இதில் 30 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இவர்களும், புகையால் பாதிக்கப்பட்டவர்களும் வாரங்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.