இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன், 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியுங்கள் என்று ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய ரஜினிகாந்த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவர்களை உதைக்க வேண்டாமா' என்று பேசினார்.
இதற்கு கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்தனர்.
பின்னர் இதற்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த், தான் கர்நாடக மக்களை அவ்வாறு கூறவில்லை. ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களைத்தான் அப்படி கூறினேன் என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்த், கடந்த திங்கட்கிழமை கர்நாடக சினிமா வர்த்தக சபை தலைவரும் நடிகையுமான ஜெயமாலாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், என்னுடைய குசேலன் திரைப்படம் கர்நாடகாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. கன்னடர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் விதமான செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கர்நாடகாவில் குசேலன் படத்தை வெளியிட அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் குசேலன் திரைப்படத்தை திரையிட கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு நேரில் வந்து பகிரங்கமாக மன்னிப்பு கோரினால்தான் குசேலன் படத்தை திரையிட அனுமதிப்போம், மீறி வெளியிட்டால் கலவரம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விட்டிருந்தனர்.
இந்நிலையில் தனியார் கன்னட தொலைக்காட்சிஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், "இந்த நிகழ்வு எனக்கு பாடத்தை கற்றுத்தந்துள்ளது. இது போன்ற தவறை நான் மீண்டும் செய்யமாட்டேன். கர்நாடகாவில் குசேலன் படத்தை திரையிட அனுமதியுங்கள்.
என்னைஎதிர்க்கும் மக்களும் கர்நாடகாவின் குழந்தைகள். அவர்கள், அவர்களுடைய மாநிலத்திற்காக இதனைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் நான் கூறியதை தயவு செய்து... தயவு செய்து... மறந்துவிடுங்கள். என்னுடைய படத்தை திரையிட எனக்கு அனுமதியுங்கள். நான் கன்னடர்களுக்கும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'குசேலன்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டனஎன்பது குறிப்பிடத்தக்கது.