ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிடில் கர்நாடகத்தில் 'குசேலன்' படம் திரையிடப்படுவதைத் தடுத்து போராட்டம் நடத்துவோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூரில் உள்ள கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு பெருமளவில் கூடிய கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பினர், ரஜினிகாந்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
"ரஜினிகாந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிடில், என்ன விலை கொடுத்தாவது கர்நாடக மாநிலத்தில் எங்கும் ரஜினியின் குசேலன் படம் திரையிடப்படுவதைத் தடுப்போம்" என்று கூறிய அவ்வமைப்பின் பேச்சாளர், "மீறி படம் திரையிடப்பட்டால் வன்முறை வெடிக்கும்" என்று எச்சரித்தார்.
இந்த வாரத் துவக்கத்தில் கர்நாடகா பிலிம் சேம்பருக்கு ரஜினி எழுதியுள்ள கடிதத்தில், கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், தனது படம் திரையிடப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் போராட்டத்தைத் துவங்கியுள்ள கன்னட அமைப்புகள், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசிற்கு எதிராகத் தமிழகத் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ரஜினி, கன்னடர்களை தரக்குறைவாகப் பேசிவிட்டார். அவமானப்படுத்திவிட்டார்." என்று குற்றம்சாற்றியுள்ளன.