மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் காப்பீட்டிற்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.
நமது நாடு முழுவதும் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 2,50,000 பெண்களுக்கு காப்பீடு வழங்குவதற்காக ஜனஸ்ரீ பீமா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
எல்.ஐ.சி. வழங்கும் இந்தத் திட்டத்தில் பங்குபெறும் பெண்கள் ஆண்டிற்கு ரூ.200 பிரீமியம் கட்ட வேண்டும். இதில் 50 விழுக்காட்டை பயனாளி அல்லது அவரது சார்பு தொண்டு நிறுவனமோ மாநில அரசோ கட்ட வேண்டும். மீதி 50 விழுக்காட்டை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசினால் உரிய நிறுவனத்திடம் செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.