மராட்டிய மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதிகளையும் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக மருத்துவர் தம்பதியான பிரகாஷ், மந்தாகினி ஆம்தே ஆகிய இருவருக்கும் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இந்தியாவில் மருத்துவ வசதிகள் மூலமாகவும் கல்வியளிப்பதன் மூலமாகவும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக, இவர்களுக்கு கம்யூனிட்டி லீடர்ஷிப் விருது வழங்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மகசேசே விருது அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கணவன்- மனைவி இருவரும் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் ஹெமல்கசா என்ற கிராமத்தில், மடியா கோன்ட் பிரிவு பழங்குடியின மக்களுக்கென்று தனியாக பள்ளி ஒன்றையும், மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
புகழ்பெற்ற சமூக சேவகரான பாபா ஆம்தேவின் மகன்தான் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பாபா ஆம்தே தனது சமூக சேவைப் பணிகளுக்காகக் கடந்த 1985 ஆம் ஆண்டு மகசேசே விருது பெற்றுள்ளார்.