எரிபொருள் பற்றாக்குறையினால் உற்பத்தித் திறனில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே நமது நாட்டின் அணு உலைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இதைவிட நல்ல தருணம் இருக்க முடியாது என்று மின்சார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையால், நிறுவப்பட்டுள்ள அணு உலைகளின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. நமது அணு உலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனான 4,120 மெகா வாட்டில் 50 விழுக்காடுதான் தற்சமயம் உற்பத்தியாகிறது என்று மின்சார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்காவுடன் நாம் மேற்கொள்ளும் அணு சக்தி ஒப்பந்தமானது, அணு தொழில்நுட்பங்களையும், நமது 22 அணு உலைகளையும் அவற்றின் முழுத் திறனுடன் இயக்கத் தேவையான எரிபொருளையும் அமெரிக்காவிடம் இருந்து பெற வழி வகுக்கும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எரிபொருள் பற்றாக்குறையால் நமது அணு உலைகளில் சில மூடப்பட்டு விட்டன. தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகளை நாம் வேகமாக மேற்கொண்டு வந்தபோதும், அதில் விரைவில் வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.