நமது நாட்டில் வட கிழக்கு மாநிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நாளை பகுதி சூரிய கிரகணம்தான் தெரியும் என்று டெல்லி நேரு கோளரங்க இயக்குநர் ரத்தினஸ்ரீ தெரிவித்துள்ளார்.
"வட கிழக்கு மாநிலங்களில் கூட மாலை 4 மணி முதல் பகுதி கிரகணம்தான் தெரியும். அது முழுமையடைவதற்குள் சூரியன் மறைந்து விடும் என்பதால் முழு கிரகணத்தையும் காண்பதற்கு வாய்ப்பில்லை" என்றார் அவர்.
சூரிய கிரகணத்தின் கடைசி கட்டத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணலாம். நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் சூரியன் மறைந்துவிடும் என்பதால், அதையும் காண முடியாது.
நமது நாட்டில் அதிகபட்சமாக சூரிய கிரகணக் காட்சியை அஸ்ஸாம் மாநிலம் சிப்சாகரில் காண முடியும்.
சூரிய கிரகணம், தலைநகர் டெல்லியில் மாலை 4.03 மணிக்குத் துவங்கி 5.56 மணிக்கு முடிகிறது. 5.02 மணிக்கு அதிகபட்சமாக மறைக்கப்பட்ட சூரியனைக் காண முடியும்.
மும்பையில் மாலை 4.27 மணி முதல் 6.03 மணி வரையும், சென்னையில் 4.40 மணி முதல் 6.07 வரையும், கொல்கத்தாவில் 4.18 முதல் 6.02 வரையும் மேகங்கள் இல்லாவிட்டால் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
உலகில் கனடா முதல் வடக்கு கிரீன்லாந்து வரையும், ஆர்க்டிக் வட்டம், மத்திய ரஷ்யா, மங்கோலியா, சீனாவின் வட பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
அடுத்த சூரிய கிரகணம் 2009, ஜனவரி 26 இல் வருகிறது. அதுவும் நமது நாட்டில் பகுதிதான் தெரியும். கிழக்கு, தெற்கு இந்தியாவில் ஓரளவிற்குப் பார்க்க முடியும்.