ஜம்மு- காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்றும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி இந்தியப் படையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தில் நரியா என்ற இடத்தில் உள்ள இந்தியப் படையினரின் கண்காணிப்பு மையத்தின் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த மாதத்தில் இது ஏழாவது முறையாகும்.
அண்மையில் பாரமுல்லா அருகே நவ்கான் என்ற இடத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டார். இந்தியப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சண்டை சுமார் 18 மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வலியுறுத்தினார்.