Publish Date: Wed, 30 Jul 2008 (19:10 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (19:10 IST)
மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாற்று பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு இன்று தனது விசாரணையைத் துவங்கியது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கால், எஃப்.எஸ். குலாஸ்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மகாவீர் பகோரா ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும், லஞ்சப் புகார் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்யவும், இன்று நடந்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 22 ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தபோது, மேற்கண்ட எம்.பி.க்கள் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றம்சாற்றியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கொட்டினர்.
இது பற்றி விசாரிக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் வி.கிஷோர் சந்திர தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவில், வி.கே.மல்ஹோத்ரா (பா.ஜ.க.), முகமது சலீம் (மார்க்சிஸ்ட்), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாடி), தேவேந்திர பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ராஜேஷ் வர்மா (பகுஜன் சமாஜ்), சி.குப்புசாமி (தி.மு.க.) ஆகியோர் உள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கும்போது, இந்தக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
Webdunia
Publish Date: Wed, 30 Jul 2008 (19:10 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (19:10 IST)