கச்சத்தீவை உள்ளடக்கிய பாக் நீரிணைப்பு பகுதியிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் மீது இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன்பிடி உரிமைகளைத் திரும்பப் பெறும் வகையில், 1974-இல் சிறிலங்க அரசுடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் மீது மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 1974 இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை சிறிலங்க அரசிற்கு விட்டுக்கொடுத்துவிட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா குற்றம்சாற்றினார்.
"உண்மையான ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகளுடன், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கவும், அவர்களது வலைகளைக் காய வைக்கவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் 1976இல் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவின் மூலம் மாற்றப்பட்டு விட்டது. அப்போது முதல் இந்திய மீனவர்கள் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காணாமலும் போயுள்ளனர்.
இந்திய மீனவர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், தமிழத்தில் உள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 67 மீனவர்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது" என்றார் ராஜா.
சிறிலங்கத் தலைநகர் கொழும்புவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி துவங்கவுள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில், கச்சத்தீவு விவகாரத்தை மத்திய அரசு எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், "இலங்கையில் வாழும் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் சிறிலங்க அரசிற்கு வழங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று ராஜா கூறினார்.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள சிறிலங்கத் தூதரகத்திற்கு முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ராஜா தெரிவித்தார்.