நமது நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லேப்டாப் கணினியை ரூ.400 விலையில் கொடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் 10 அமெரிக்க டாலர் மதிப்பிலான சிறப்பு லேப்டாப்பை உருவாக்கும் ஆய்வில் பெங்களூரு மற்றும் சென்னை ஐ.ஐ.டி.க்கள் ஏற்கெனவே ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"மாணவர்களுக்கு 10 டாலர் மதிப்பில் லேப்டாப்களை உருவாக்கி வழங்குவதற்கான ஆய்வுகளை மத்திய அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது" என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
நமது நாட்டு மாணவர்கள் சமூக- பொருளாதார அளவில் முன்னேற வேண்டும், தகவல் தொழில்நுட்பத்தின் பலன்களை முடிந்தவரை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
'இ- இந்தியா 2008' என்ற தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் புரந்தேஸ்வரி, வரும் ஆண்டுகளில் பள்ளி அளவிலும், உயர் கல்விக் கூடங்களிலும் தகவல் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.