ராமர் சேது எனப்படும் மணல் திட்டுக்களை தேச சின்னமாக அறிவிப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜெ.எம்.பாஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஃப் எஸ் நாரிமேன் "தேச சின்னமாக அறிவிக்கப்படுவதற்கு உரிய அடிப்படை எதுவும் ராமர் சேது எனப்படும் மணல் திட்டுக்களுக்கு இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
ராமர் சேதுவை இடிக்காமல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றும், இன்று மாலையோ அல்லது நாளையோ அரசின் முடிவு தனது கைக்குக் கிடைக்கலாம் என்றும் வழக்கறிஞர் நாரிமேன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
"ராமர் சேதுவை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆலோசனை சிறப்பு விடயமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ள இந்த ஆலோசனை, அறிவியல்பூர்வமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்றோ நாளையோ நீதிமன்றத்தில் பதிலைத் தெரிவிக்கிறேன்" என்றார் வழக்கறிஞர் நாரிமேன்.
கம்பர் எழுதியுள்ள ராமாயணத்தில், ராமர் கட்டிய பாலத்தை அவரே இடித்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எதிர்வாதம் செய்த வழக்கறிஞர் நாரிமன், ராமர் சேது எனப்படும் மணல் திட்டுக்களை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.