ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை உள்ளதாகக் கருதப்படுவதால், குஜராத் காவலர்களுக்கு வழக்கு விசாரணையில் உதவுவதற்காக ராஜஸ்தான் காவலர்கள் விரைந்துள்ளனர்.
"அகமதாபாத்- ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ள விதம் ஒரே மாதிரியாக உள்ளது. குண்டுகளில் பயன்படுத்தப்பட்டு உள்ள வெடிபொருட்களிலும் ஒற்றுமை உள்ளது. அநேகமாக இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம். எனவே ராஜஸ்தான் காவல்துறையின் உதவியைக் கேட்டுள்ளோம்" என்று அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஆஷிஸ் பாட்டியா தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக குஜராத் காவல்துறையின் தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது என்று வெளியான தகவலை ஆஷிஸ் பாட்டியா மறுத்துள்ளார்.