ஜம்மு- காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் இடையில் தொடர்ந்து 16 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை இன்று அதிகாலை முடிவிற்கு வந்தது.
இந்தச் சண்டையில் பாகிஸ்தான் படையினரின் குண்டு பாய்ந்து பலியான இந்தியப் படை வீரர் மகேசின் உடல், பள்ளம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தியப் படையினர் சுட்டதில் பாகிஸ்தான் படையினர் 4 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 3.30 மணியளவில் துவங்கிய சண்டை இன்று அதிகாலை முடிவிற்கு வந்த நிலையில், உடனடியாக ராணுவ அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த 2003 சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடந்துள்ள இந்த மோதல் குறித்து, இந்திய ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தான் தரப்பை உடனடியாகத் தொடர்புகொண்டு விவாதித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் நெளகாம் பிரிவில் உள்ள கயான் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியை அத்துமீறித் தாண்டிய படையினர், இந்தியப் படையினரைப் பார்த்து அந்த இடத்தில் இருந்து விலகுமாறு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு முற்றி மோதல் வெடித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சண்டை இன்று அதிகாலைதான் முடிவிற்கு வந்துள்ளது.