பதற்றத்திற்குரிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கண்காணிப்பை அதிகரிப்படுத்துவதோடு, பொது மக்களுக்குத் தொந்தரவில்லா வகையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 50 பேரின் உயிரைப் பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து, இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திட்டங்கள் பற்றி எல்லா மாநிலங்களின் முதல்வர்களும் அந்தந்த மாநிலப் பாதுகாப்பு அதிகாரிகளோடு கலந்தாய்வு நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களின் முதன்மைச் செயலர்கள், காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்கும் கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடக்கவுள்ளது.