மக்களைப் பிரித்து சமூகக் கட்டமைப்பை உடைப்பதற்காக பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
குண்டுகள் வெடித்த நேரத்திலும் ஒற்றுமையாக இருந்த குஜராத் மக்களின் மன உறுதியைப் பாராட்டுவதாகத் தெரிவித்த பிரதமர், "மக்களின் சகோதரத்துவ உணர்வைப் புண்படுத்தி, அவர்களைத் திசை திருப்புவதன் மூலம் சமூகக் கட்டமைப்பை உடைத்து விடலாம் என்று பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என்பதைத்தான் இதுபோன்ற தாக்குதல்கள் காட்டுகின்றன. பயங்கரவாதிகளின் இத்தகைய முயற்சிள் ஒருபோதும் வெற்றிபெறாது" என்றார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.
அப்போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
அவருடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இருந்தனர்.