கோயம்புத்தூர்: ராமர் கட்டிய பாலத்தை அவரே இடித்து விட்டார் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியதன் மூலம் மத்திய அரசு வரலாற்றைத் திரித்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாற்றியுள்ளது.
"கம்பன் எழுதிய ராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமர் தான் கட்டிய பாலத்தை இடித்து விட்டதாகக் கூறப்படவில்லை. இதை தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி ஆமோதிக்கும் நிலையில், அவருடைய கட்சி அங்கம் வகிக்கும் ஐ.மு.கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றை திரிக்கிறது" என்று வி.எச்.பி. பன்னாட்டுத் தலைவர் அசோக் சிங்கால் கோவையில் கூறினார்.
அவருடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த வி.எச்.பி. பன்னாட்டு பொதுச் செயலர் பிரவீன் தொகாடியா, "என்ன விலை கொடுத்தாவது ராமர் பாலம் காக்கப்படும்" என்றார்.
ஹரித்துவாரில் நடந்த இந்து மதத் தலைவர்கள் மற்றும் துறவிகள் கூட்டத்தில், ராமர் பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் பாலம் கட்டப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தொகாடியா, நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் அப்பணி முடிக்கப்படும் என்றார்.