கடந்த ஜூலை 26 ஆம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரையே உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி தலைநகர் அகமதாபாத்தில் 14 இடங்களில் 16 குண்டுகள் வெடித்தன. இதனால் நகரமே குலுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாயினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குண்டு வெடிப்பில் சிக்கி படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்காக, உதய்ப்பூர் என்னுமிடத்துக்கு காவல்துறை குழு ஒன்று சென்றுள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, குண்டு வெடிப்பு நடந்த அகமதாபாத் நகரில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது.