அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹலீமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை துவங்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சிமி இயக்கத்தவரான அப்துல் ஹலீமிடம் நடந்து வரும் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்" என்று காவல்துறை இணை ஆணையர் ஆஷிஸ் பாட்டியா தெரிவித்தார்.
தாக்குதல்களுக்கு ஆள் திரட்டும் பணியில் அப்துல் ஹலீம் ஈடுபட்டு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு!
இதற்கிடையில் தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சைக்கிள்கள் யாவும் பழைய பொருள் விற்பனைக் கடைகளில் வாங்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.