குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும், காயமடைந்து உள்ளவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசிற்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுடன் தொடர்பில் உள்ளது. குண்டு வெடிப்புகள் பற்றிய விவரங்களையும், சேத விவரங்களையும் குஜராத் காவல்துறையிடம் கேட்டுள்ளோம். அதிவிரைவுப் படையை அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை செயலர் மதுக்கர் குப்தா தெரிவித்தார்.
குஜராத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.