குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 12 க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 30 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் குண்டுகள் சைக்கிள்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஜி.கே.பர்மார் தெரிவித்துள்ளார்.
நகரின் மற்ற இடங்களில் ஏதாவது வெடிக்காத குண்டுகள் உள்ளனவா என்பதைத் தேடும் பணிகளில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த மணி நகர், பாபு நகர், டைமண்ட் மார்க்கெட், சர்நாக்பூர், ராஜ்பூர், ஜவஹர் நகர், ஹட்கேஷ்வர், நரோல் வளைவு, இசன்பூர், தக்கார் பாபநகர் உள்ளிட்ட பகுதிகளில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் மாலை 6.30 மணி முதல் சுமார் 25 நிமிட இடைவெளியில் குண்டுகள் வெடித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஒரு குண்டு பேருந்து ஒன்றிலும், மற்றொரு குண்டு பாபு நகர் ரயில் நிலையத்திற்கு அருகிலும் வெடித்துள்ளது. இந்த இரண்டு குண்டுகளும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டு வெடிப்புகளில் இதுவரை 10 பேர் பலியாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து வெடித்துள்ள குண்டுகள் அனைத்தும் சக்தி குறைந்தவை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்த மறுநாள் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் வெடித்துள்ள குண்டுகள் ஒரே மாதிரியானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.