மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி, தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுப்பிய புகாரை விசாரிக்க, 7 பேர் கொண்ட மக்களவைக் குழுவினை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால மக்களவை உறுப்பினர் வி.கிஷோர் சந்திர தியோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், வி.கே.மல்ஹோத்ரா (பா.ஜ.க.), முகமது சலீம் (மார்க்சிஸ்ட்), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாடி), தேவேந்திர பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ராஜேஷ் வர்மா (பகுஜன் சமாஜ்), சி.குப்புசாமி (தி.மு.க.) ஆகியோர் உள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கும்போது, இந்தக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று மக்களவைத் தலைமைச் செயலர் பி.டி.டி. ஆச்சார்யா தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கால், எஃப்.எஸ். குலாஸ்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மகரி பகோரா ஆகியோர் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் அளித்துள்ள புகாரில், சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவரின் அரசியல் செயலர் அகமது பாட்டீல் ஆகியோர் பெயரை குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இதை மறுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 22 ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தபோது, மேற்கண்ட எம்.பி.க்கள் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றம்சாற்றியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கொட்டினர்.