நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் மக்களவைத் தலைவர் அலுவலகத்திற்குத் தொடர்புள்ளது என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
"நான் கூறியவை முழுமையாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளது" என்று பெங்களூருவில் இருந்து தொலைபேசியில் சீதாராம் யச்சூரி கூறியதாக பி.டி.ஐ. நிறுவனச் செய்தி தெரிவிக்கிறது.
"மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட ஆதாரம் உள்ளதாக கூறப்படும் டேப் இன்னும் மக்களவைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படவில்லை.
அரசமைப்பின் மீதான நம்பகத்தன்மை மீண்ட பின்புதான் உண்மை வெளிப்படும். அதற்கு முன்பு நடத்தப்பட வேண்டிய விசாரணையை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும்" என்றுதான் தான் கூறியதாக யச்சூரி தெரிவித்தார்.