நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து பெங்களூரு நகரத்தின் முக்கியப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா பாதுகாப்பில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று அறிவித்திருந்தார்.
விமான நிலையம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட இடங்களில் அதி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் காவலர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டு வெடித்த இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும், தேசிய அளவில் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் பார்வையாளர்களைத் தங்கள் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை.