பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாளான இன்று கோரமங்கலத்தில் உள்ள பெங்களூரு மால் அருகில் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயழிலக்கச் செய்யப்பட்டுள்ளது.
கோரமங்கலத்தில் உள்ள போரம் மால் அருகில் சந்தேகத்திற்கு இடமான மர்மப் பார்சல் ஒன்று கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதுபற்றிக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு வல்லுநர்கள் அந்தப் பார்சலைப் பரிசோதிக்கையில், அது வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. உடனடியாக அதை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று செயழிலக்கச் செய்தனர்.
இந்தக் குண்டு, பெங்களூருவின் பல இடங்களில் நேற்று வெடித்த குண்டுகளை ஒத்திருந்தது என்று காவல்துறை ஆணையர் சங்கர் பிட்ரி உறுதி செய்தார்.
இந்தச் சம்பவத்தால் பெங்களூரு நகரம் முழுவதும் பதற்றம் பரவியது. போரம் மால் அமைந்துள்ள ஒசூர் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.