தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நியாயமாகவும் உடனுக்குடனும் ஊதியம் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க மத்திய நிதியமைச்சகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங்கிடம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலமாக மட்டுமே ஊதியம் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) நிறுவனங்களுடன் சேர்ந்து மின்னணு முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை அஞ்சல் துறை உருவாக்கி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இத்தொழிலாளர்களுக்காக 1.10 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 2 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.