பெங்களூருவில் அடுத்தடுத்து 9 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 2 பேர் பலியானதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்திய அறிவியல் கழகத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அமைதியடைந்திருந்த பெங்களூரு நகரம் இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளால் பரபரப்படைந்துள்ளது.
விட்டல் மல்லய்யா சாலை, பந்தரப்பல்யா, ரிச்மண்ட் வளைவு, மைசூர் சாலை, நயந்தஹல்லி, மடிவாலா, அடுகோடி ஆகிய இடங்களில் மதியம் 1.30 மணி முதல் 1.45 மணிக்குள் சாலை ஓரங்களிலும், அகதிகள் முகாம்களுக்கு அருகிலும் இரும்பு நட்டுகளால் தயாரிக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்தக் குண்டு வெடிப்புகளில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு- ஒசூர் சாலையில் உள்ள மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் குண்டு வெடிப்பில் பலியானார். அவருடைய கணவரும் மற்றொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர்.
ஒசூர் சாலைக்கும் மடிவாலாவிற்கும் இடையில் 4 குண்டுகள் வெடித்துள்ளன. நயந்தஹல்லி, விட்டல் மல்லய்யா சாலை, ரிச்மண்ட் வளைவு ஆகிய இடங்களில் 3 குண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று காவல்துறை ஆணையர் சங்கர் பிடாரி தெரிவித்தார்.
இரண்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வெடித்த குண்டுகள் சக்தி குறைந்தவை என்றும், குண்டு வெடித்த இடம் ஒன்றில் இருந்து கல் குவாரியில் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
இருந்தாலும், தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தைச் சேர்ந்த உள்ளூர் உறுப்பினர் யாராவது இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், குண்டு செய்வதற்கான வழிமுறைகளை அவர் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர்-இ தாயிபா இயக்கத்திடம் இருந்து பெற்றிருக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று அறிவித்துள்ளார்.