புது டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானத்தில் திடீரென்று தீ பிடித்தது. அதில் இருந்த பைலட்களும் 241 பயணிகளும் அவசர வழியில் வெளியேறி உயிர் தப்பினர்.
தலைநகர் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று மதியம் மொரிசியஸ் நாட்டு விமானம் ஒன்று 241 பயணிகளுடன் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.
அப்போது திடீரென்று விமானத்தின் அடிப்பகுதியில் தீ பிடித்ததாகவும், இதையடுத்த விமானப் பணியாளர்கள் 11 பேரும் பயணிகள் 241 பேரும் அவசர வழியில் வெளியேறித் தப்பியதாகவும் விமான நிலையப் பேச்சாளர் அருண் அரோரா தெரிவித்தார்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று விமானத்தில் பிடித்த தீயை அணைத்தன.
விமான என்ஜினில் பறவைகள் மோதியதே தீ பிடித்ததற்குக் காரணம் என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறினாலும், அதை அருண் அரோரா உறுதி செய்யவில்லை. விசாரணைக்குப் பிறகே எதையும் கூற முடியும் என்றார் அவர்.